Tuesday, January 24, 2012

கும்பாபிஷேக காலத்தில் மிகவும் சிறப்பிற்குரிய தைலாப்பியாங்கம் என்று சொல்லப்படும் எண்ணெய் சாத்துதலின் மகிமையை அறிந்து கொள்ளுங்கள்


ஆலய வரலாற்றில் "கும்பாபிசேகம்" என்பது முக்கியமான இறைபணி கொண்ட பெரும் மகா கிரியை ஆகும் .விக்கிரகங்கள் சாதாரண கல்லாகக் கணிக்கப்படுவதால், கும்பாபிசேகம் நடைபெறும் பொழுது தான் விக்கிரகங்களை சலாதிவாசம் (தண்ணீரில் வைப்பது) தான்யாதிவாசம் (தானியத்தினுள் வைப்பது) செய்து மந்திரங்களாலே யந்திரங்களை எழுதி விக்கிரகத்தின் அடியிலே வைத்து யாகங்கள் செய்து சோதியை வளர்த்து அந்த சோதியைக் கும்பத்துக்குக் கொண்டுபோய் பின்னர் கும்பத்திலேயிருந்து பிம்பத்துக்குக் கொண்டு போவதாகிய கும்பாபிசேக நிகழ்வின் பின்னர் தான் இவ்விக்கிரகங்கள் தெய்வசக்தி பெற்றுவிடுவதால் இறைவன் வாழுமிடமாகக் கருதப்படுகின்றது.

புதியதாகக் கட்டப்பட்ட கோவிலுக்குச் செய்யப்பட்ட கும்பாபிசேகத்தின் பொழுது சாத்தப்பட்ட அட்டபந்தனமானது (மருந்து சாத்துதல்) ஆகக்கூடியது பன்னிரணடு வருடங்கள் வரைதான் பழுதடையாமல் இருக்கும். இவ்வாறு சாத்தப்படுகின்ற அட்ட பந்தனம் பழுதடையும் பொழுது வாலத்தாபனம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்ய ப்படும். சில சந்தாற்ப்பங்களில் அட்டபந்தனக் கலவை பிழையான அளவுகளில் கலக் கப்பட்டாலோ அல்லது நன்கு இடிக்கப்படாவிட்டாலோ பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னரே பழுதடைய ஆரம்பித்துவிடும். இப்படியான சந்தர்ப்பங்களிலேயும் கும்பா பிசேகம் செய்யப்படும். அதைவிட கோவில்களிலே ஏதாவது பாரிய திருத்த வேலைகள் இடம்பெற்றாலும் கும்பாபிசேகம் செய்வது வழக்கம்.

கும்பாபிஷேகம் செய்யும்போது கும்பத் தீர்த்தத்தில் இறைவனை ஆவாகனம் செய்து, யாகத்தின்மூலம் மந்திரம் ஜெபித்து சக்தியை உருவேற்றி, அந்தக் கும்பத் தீர்த்தத்தை இறை பிம்பத்திலும் கோபுர கலசங்களிலும் அபிஷேகம் செய்வர்.
கடவுளின் உடலாகக் கும்பத்தையும், அதன் மேல் சுற்றப்பட்ட நூல் 72,000 நாடி நரம்பு களையும், உள்ளே ஊற்றப்பட்ட நீர் ரத்தமாக வும், அதனுள் போடப்பட்ட தங்கம் ஜீவனாகவும், மேலே வைக்கப்பட்ட தேங்காய் தலையாகவும், கும்பத்தின் கீழ் பரப்பப்பட்ட தானியம் ஆசனமாகவும் பாவித்து; வஸ்திரம், சந்தனம், பூக்கள் ஆகியவற்றைக் கொண்டு அலங்காரம் செய்து யாக மேடையில் அமைப்பது வழக்கமாகும். சாதாரண கும்பமானது மந்திர சக்தியால் உயர்கலசமாக மாறுகிறது. கும்பாபிஷேகத்தால் ஆலயத்தின் இறைசக்தி பன்மடங்கு பெருகுகிறது.
கும்பாபிஷேகம் ஆவர்த்தம், அனுவர்த்தம், புனஸ்வர்த்தம், அந்தரிதம் என நான்கு வகைப் படும்.
1. தெய்வ மூர்த்தங்களையும் கோவிலையும் புதிதாக அமைத்து நிர்மாணம் செய்வது ஆவர்த்தம் எனப்படும்.
2. கோவிலோ, தெய்வ மூர்த்தங்களோ வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டால், அவற்றை மறுபடி அமைப்பது அனுவர்த்தம் என்று சொல்லப்படும்.
3. ஆலயம் பழுதடைந்துவிட்டால் அதற்கு அஷ்டபந்தன மருந்து சாற்றி, மீண்டும் புதுப்பிப்பது புனஸ்வர்த்தம் ஆகும்.
4. கள்வர்களால் அபகரிக்கப்பட்ட மூர்த்தி களை மீண்டும் பிரதிஷ்டை செய்வது அந்தரிதம் என்று சொல்லப்படும்.

மேற் கூறப்பட்ட கும்பாபிசேக உற்சவத்தில் இவ் எண்ணெய் சாத்தும் நிகழ்வு முக்கியமானதொன்றாக கருதப்படுகின்றது.
எண்ணெய் சாத்துதல் என்பது ?
கும்பாபிஷேகத்தில் உள்ள தனிச்சிறப்பு யாதெனில் எல்லா அடியார்களும்  தொட்டுவணங்கும் நிலையாகிய தைலாப்பியாங்கம் என்படும்; எண்ணெய்க்காப்பு சாத்துதல எண்ணெய்க்காப்பு சாத்துத்தும்; வழிபாடாகும். விரிவாகக் கூறின்; கற்பக்கிரகத்தினுள் சென்று இறைவனது திருமேனியை தெற்பை புல்லினாலே எண்ணெய் சாத்துதல். அத்துடன் இதில் நடைபெறும் கிரியைகள் மற்றை உற்சவங்களில் காணமுடியாது என்பது திண்ணம்.
ஆலய மகோற்சவ காலத்திலோ ஏனைய ஆலயக் கிரியைகளிலோ இறைவனோடு நேரடித் தொடர்பைக் கொண்ட அந்தணர்களால் மட்டுமே விக்கிரகங்களை தொடவும் அபிஷேகம் செய்யவும் ஆராதிக்கவும் உரிமைகள் உண்டு.ஏனெனில் இந்துக் கோயில் சம்பிரதாயத்தைப்  பொறுத்தவரையில் தீட்டு தொடக்கு தீண்டாமை முதலிய பல காரணங்களால் அடியவர்களுக்கு அப்பிடியானதொரு வாய்ப்பு தவறவிடப்படுகின்றது.
இவ்வாறனதொரு தெய்வ சந்தர்ப்பம் அடியவர்களாகிய நமக்கு பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறையும் ஆலயத்தில் ஏதேனும்  புதிதாக கோயில் நிர்மாண வேலைகள் நடைபெற்றால் மட்டுமே கிட்டுகின்றது.
 நாம் இப் பிரபஞ்சத்தில் பிறந்து என்ன பலன் என எம் மனதினுள்ளே மனக் கசப்போடு பலமுறை நொந்திருக்கிறோம். அவ்வாறான மனக் கசப்பின் மருந்தாக தான் நம்மை படைத்த இறைவன் தன்னையே தந்து எண்ணெய் வைக்கும் சந்தர்ப்பத்தை தருகிறான். 
இதுவரையில் நாம் அம்பிகையின் அருமை பெருமைகளையும் சிறப்புக்களையும் பாடி மட்டுமே அருட் கடாசத்தைப் பெற்றிருக்கின்றோம்.அனால் இன்று அம்பிகையை நம் கரங்களால் தொட்டு எண்ணெய் சாத்தி வரத்தை பெறும் பெரிய பாக்கியசாலிகளாக இருக்கின்றோம். 
இவ்வாறானதொரு அதிஷ்ட சந்தர்ப்பம் தான் நம் சொர்க்க பூமியாகிய நயினையம்பதியிலே பாம்பணையில் பள்ளி கொள்ளும் நம் புவனேஸ்வரியின் புண்ணிய பீடமதில் கிடைத்திருக்கின்றது. இவ் எண்ணெய் சாத்தும் நிகழ்வு 25.01.2012 இன்று அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி 27.01.2012 அன்று மாலை 6.00 மணி வரை நடைபெறவுள்ளது
ஆகவே இவ்வாறான சந்தர்ப்பத்தை நழுவ விடாது அனைத்து அம்பிகை அடியார்களும் அன்னையின் பாதமதை தொட்டு அவள் அருள் வேண்டி அந்தம் வரை அவள் சிந்தனையோடு சிறப்புடன் வாழ வழி  செய்வோம்.
ஓம் சக்தி ! ஓம் சக்தி ! ஓம் சக்தி !

ஆக்கம் 
அம்பிகை அடியான் 
தணிகாசலம் சுதாகரன் 
25.01.2012
1.20 pm