Friday, September 9, 2011

ஆதங்கம்

குழந்தைகளின்
சிரிப்பில்
இறைவனை
வெறுக்கிறேன்
என் மனதில் உள்ள
வேண்டுகோள்
நிறைவுறும் வரை ...

Wednesday, August 24, 2011

நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வரலாறு

அன்பாயும் சிவமாயும், அருளாயும் பொலிவாயும், துன்பத்தில் இன்பமாகவும், வறுமையில் செழிப்பாகவும், பேதமையில் பேரறிவாகவும் எல்லா உயிர்களிடத்தும் கருணை கொண்டவளாகவும் விளங்குபவள் பராசக்தியாகிய அன்னை அன்னையாகப் போற்றப்படும் சக்தியானது. அண்டங்களிலுள்ள உயிர்களையெல்லாம் அரவணைத்து, அன்பு செலுத்தும் பேரருட் சக்தி என்று போற்றப்படுகின்றது. தனது காட்சியாலும், உணர்வாலும், திருவருட்பொலிவாலும், பார்க்குமிடமெங்கும் நீக்கமற நிறைந்து காட்சியளிப்பவள் அன்னை பராசக்தி, சிவமானது அறிவு என்றால், சக்தி ஆற்றலாகக் காணப்படுகின்றது. எங்கும், எதிலும் உயிர்கொடுத்து இயக்கும் சக்தியைப் (Energy) பராசக்தி என்று இந்துக்கள் போற்றுவர். உலகிலே விஞ்ஞானரீதியாகச் சடப்பொருள், சக்திப்பொருள் என இருபொருள் உண்டென்பர். சடமும், சக்தியும் இணைந்து செயற்படும்போது செயலும், இயக்கமும் ஏற்படுகின்றது. எனவேதான் சக்தியின்றிச் சிவமில்லை, சிவமின்றிச் சக்தியில்லை என்ற பொருள் நிறைந்த மரபு இந்துக்களிடையே காணப்படுகின்றது. சக்தியற்றுக் கிடக்கின்றவனைப் பார்த்து, சிவனே என்று கிடக்கின்றான் என்று கூறும் தன்மை, இந்துசமுதாயத்திலே காணப்படுகின்றது. சிவமும், சக்தியும் உலக இயக்கத்திற்கு அத்தியாவசியமானது என்பதை மனிதகுலம் தோன்றியபோதே மெஞ்ஞானிகள் உணர்ந்துள்ளனர்.

'அருளது சக்தியாகும் அரன் தனக்கு
அருளையின்றித் தெருள் சிவமில்லை
அந்தச் சிவமி;ன்றிச் சக்தியில்லை'


என்ற அருள்வாக்குச் சிவஞானசித்தியாரிலே காணப்படுகின்றது.

'எங்கெங்கு காணினும் சக்தியடா-தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா-அவள்
தங்கும் வெளியெங்கும் கோடி அண்டம்-அந்த
தாயின் கைப் பந்தென ஓடுதடா'


என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் சக்தி தத்துவ இயக்கும் கொள்கை, சக்தியினுடைய தன்மையை எடுத்துக் காட்டுவதாகக் காணப்படுகின்றது.

'அவள் தந்த ஆக்கம் இவ்வுலகமெலாம்' என்பது சைவசித்தாந்தக் கொள்கையாகக் காணப்படுகின்றது. அண்டம், உயிர்கள் என்பனவற்றின் தோற்றம், நிலை, ஓடுக்கம் ஆகியவற்றிற்குப் பெரும் ஆற்றல் இருக்கவேண்டுமென்பது மெஞ்ஞானிகளின் முடிபு. அன்றாடம் மனிதவளர்ச்சியும், உணர்ச்சியும், பெருக்கமும் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றது. இவற்றிற்கெல்லாம் மூலகாரணமாயிருப்பது சக்தியே, அறிவே சிவமாகவும், அருளே சக்தியாகவும் இவ்வுலகை இயக்கி நிற்பதை இந்துசமயம் தெளிவாகவே விளக்கியுள்ளது.

அன்னையின் அருள் ஈழத்திலே பிரவாகமெடுத்துக் காணப்படுகின்றது. இவற்றுள் அன்னையின் திருவருள் அமுதஊற்றாகப் பாயும் பதியாக விளங்குவது, நயினாதீவில் அமைந்துள்ள ஸ்ரீ நாகபூசணி அம்மன் திருக்கோயிலாகும். இக்கோயில் அமைந்துள்ள நயினாதீவு ஏறக்குறைய மூன்று மைல் நீளமும், ஒரு மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட தீவாகக் காணப்படுகின்றது. இத்தீவு யாழ்ப்பாணப்பட்டினத்திற்குத் தென்மேற்கே, சுமார் இருபதுமைல் தூரத்தில் உள்ளது. யாழ்ப்பாணத் தீபகற்பத்தைச் சூழவுள்ள சப்த தீவுகளுள் நடுநாயகமாக விளங்குவது நயினாதீவு.



நயினாதீவு பல்வேறு வகையிலும் சிறப்புப்பெற்ற தீவாகக் காணப்படுகின்றது. திராவிட இனமாகிய தமிழர்களின் முன்னோர்களாக, நாகர் இனத்தவர்கள் போற்றப்படுகின்றனர். நாகர்களின் முக்கிய வழ்பாடாகக் காணப்பட்டது நாகவழிபாடு. ஈழத்தமிழர்களிடையேயும், தமிழகத் தமிழர்களிடையேயும், ஆதியிலிருந்தே நாகவழிபாடு காணப்பட்டதென்பதற்கு அதன் எச்சங்களாகக் காணப்படும் வழிபாட்டு முறைகளும், ஊர்ப்பெயர்களும் சான்றாகக் காணப்படுகின்றன. நாகர்கோயில் நாகதேவன்துறை, நாகதீவு போன்ற பெயர்களும், இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டுவரும் நாகவழிபாட்டுமுறையும், இக்கூற்றை உறுதி செய்கின்றது. ஆரியர் வருகை காரணமாக முதன்மை வழிபாடாகக் காணப்பட்ட நாகவழிபாடு அருகியே பின்பற்றப்பட்டது. ஆதியிலே காணப்பட்ட நாகவழிபாட்டுத் தலங்கள் யாவும், நாகதம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில் என உருமாற்றம் பெற்றன.

ஈழத்தில் நாகர்களின் முக்கிய பிரதேசமாக நயினாதீவு காணப்பட்டுள்ளது. ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்தலை நாகச்சிலை, எண்ணாயிரம் ஆண்டுகள் வரை பழமையானதென ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஈழத்திலே காணப்படும் பெரும்பாலான கோயில்கள். ஐதீகம் மற்றும் புராணக் கதைகளோடு மட்டும் தொடர்பு கொண்டவையாகக் காணப்படும்போது, நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம், பல்வேறு தொடர்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது. வரலாற்றுக்குறிப்புகள், சாசன ஆதாரங்கள், தமிழ் இலக்கியத் தொடர்புகள், கர்ணபரம்பரைச் செய்திகள், புராணவரலாறுகள் எனப் பல்வேறுபட்ட தொடர்புகளையுடையதாக விளங்கும் சிறப்புப் பெற்றது இவ்வாலயம். இவ்வாலயம் அமைந்துள்ள தீவும் மிகத் தொன்மையான வரலாற்றைக் கொண்டு, பல்வேறுவகையில் ஆலயத்தோடும் தொடர்புகொண்டுள்ளது. சரியான வரலாறுகள் காணப்படாதவிடத்து இலக்கியங்களே வரலாறாகவும் கருதப்படுவதுண்டு. ஈழத் தமிழர்களின் தொன்மையும் வரலாறும் இலக்கியங்களில் பொதிந்து கிடக்கின்றது.

பல்வேறு சிறப்புக்களைக் கொண்ட நயினாதீவின் தோற்றத்தை அறியும்போது அதனுடன் பின்னிப்பிணைந்து கிடக்கும் அரிய சான்றுகளும் வெளிப்படும். ஆரம்பத்தில் ஈழமும் அதனைச் சார்ந்த தீவுகளும், குமரிக்கண்டம் என்ற பெருநிலப்பரப்பின் ஒரு பகுதியாகவே காணப்பட்டுள்ளது. கன்னியாகுமரிக்குத் தெற்கே காணப்படுகின்ற இந்துசமுத்திரம், முன்பு நிலப்பரப்பாகவே காணப்பட்டுள்ளது. குமரிக்கண்டம் எனும் இந்நிலப்பரப்பு கிழக்கே பர்மா தொடங்கித் தெற்கே சீனாவரையிலும், மேற்கே ஆபிரிக்காவின் கிழக்குத் தெற்குக்கரைவரையிலும், வடக்கே விந்தியமலை வரையும் பரந்திருந்தது. அக்காலத் தமிழக எல்லையைக் குறிக்கும் பழத்தமிழ்ப்பாடலில்,

'வேங்கடம் குமரித்தீம் புனல் பௌவமென்று
நான்கெல்லை தமிழக வழக்கே'


என்ற குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பெருநிலப்பரப்பைப் பௌதிகவியலாளர் லெமூரியாக்கண்டம் எனக் குறிப்பிட்டுள்ளனர். இக் குமரிக்கண்டத்தில் குமரிக்கோடு என்ற பெயரைக்கொண்ட மலையும், குமரி ஆறும் காணப்பட்டுள்ளது. இந்த ஆறு, குமரித்தீம்புனல் எனப் பழந்தமிழ் இலக்கியங்களிலே கூறப்பட்டுள்ளது. பழந்தமிழ்நிலப்பரப்பாக இலக்கியங்களிலே கூறப்பட்ட இந்நிலப்பரப்பு, கடற்கோளினால் கடலுக்கு இரையானது. இச்செய்தியைச் சிலப்பதிகாரத்தில்,

'பஃறுளியாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள'


என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். கடலுள் மூழ்கிய குமரிக்கண்டத்தைப்பற்றிய குறிப்புக்களைக் கலித்தொகையிலும் காணலாம்.



வரலாற்றிலும், இலங்கையின் பெருநிலப்பரப்பு கடல்வாய்ப்பட்ட குறிப்புகள் காணப்படுகின்றன. கி.மு. மூன்றாம் நூற்றாண்டுகளுக்கு முன்பு, இருபெரும் கடற்கோள்கள் ஏற்பட்டு. இதனால் தற்போதுள்ள இலங்கையின் பெரும்பகுதி கடலுள் மூழ்கியது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் திஸ்ஸன் என்னும் நாக அரசன் கல்யாணியை ஆண்ட காலத்திலும் கடற்கோள் ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் மேற்குக்கரையில் பெரும்பாகம் கடல்கொண்டது. கி.பி. 79 ஆம் ஆண்டிலும் கடற்கோள் ஏற்பட்டுள்ளது. கி.பி. 150 ஆம் ஆண்டளவில் ஏற்பட்ட கடல்கோளினால் காவிரிப்பூம்பட்டினம் அழிந்தது. இவ்வாறான அழிவுகளால் பரந்து காணப்பட்ட நிலப்பரப்பு அருகி, எஞ்சிய நிலப்பரப்பே தமிழ்நாடும் இலங்கையும், அதனைச் சூழவுள்ள தீவுகளும் என ஆய்வாளர் கூறியுள்ளனர். இக்கூற்றுகளின் மூலம் ஈழமும் அதனைச் சூழவுள்ள தீவுகளின் தொன்மையையும் விளங்கிக்கொள்ளமுடியும்.

யாழ்ப்பாணத்தைச் சூழவுள்ள தீவுகள் எவ்வாறு ஏற்பட்டதென்பதற்கு வரலாற்றாசிரியர் செ.இராசநாயகம் அவர்கள் கூற்றும் கருத்திற்கொள்ளத்தக்கது. தற்காலத்திலே குடா நாடாகவிருக்கும் யாழ்ப்பாணம், கி.மு. அனேக ஆயிரமாண்டுகளுக்கு முன், இரண்டு தீவுகளாயிருந்துள்ளது. மேற்கே காணப்பட்ட தீவை நாகதீவம், மணிநாகதீவம், மணிபுரம், மணிபல்லவர் என வழங்கப்பட்ட பெருந்தீவென்று அழைத்துள்ளனர். கிழக்கே எருமை முல்லைத்தீவு, எருமைத்தீவு எனப் பெயர்பெற்ற சிறுதீவு காணப்படடுள்ளது. காலந்தோறும் ஏற்பட்ட பூகம்பங்களினாலும், கடற்கோளினாலும் அழிக்கப்பட்டு, மேற்கே ஒன்றாயிருந்த பெருத்தீவகம் பல தீவுகளாகப் பிரிக்கப்பட்டு, காரைதீவு, வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய தீவுகளும், அத்தோடு வலிகாமமும் அப்பெருந்தீவகத்தின் பகுதிகளாகக் காணப்பட்டன. அவ்வாறே கிழக்கே ஒன்றாயிருந்து சிறுதீவகம், களப்புக்கடலால், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என்னும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.

இவ்வாறான புவியியல் மாற்றங்களால், ஈழமும் அதனைச் சூழவுள்ள தீவுகளும் தோன்றியுள்ளமையை மேற்கூறிய கூற்றுகள் தெளிவுபடுத்தியுள்ளன. குமரிக்கண்டம் என்ற நிலப்பரப்புள் தமிழகத்தோடு ஈழநாடும் காணப்பட்டுள்ளது. எனவே, தமிழகம் எத்தனை தொன்மையான சிறப்புகளைக் கொண்டதோ, அத்தகைய சிறப்புகளை ஈழமும், அதனைச் சார்ந்த தீவுகளும் கொண்டிருந்தன.

இவ்வாறான தொன்மையோடு, யாழ்ப்பாணத்திற்குத் தென்மேற்கே காணப்படும் தீவுகளுள், கடல் நடுவே கம்பீரமாக நிற்கும் தீவு நயினாதீவு. இத்தீவு சக்தியின் அருள் பெற்ற தீவாக விளங்குவதோடு, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் சிறப்புகளையும் கொண்ட நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

உலகிலே பல சக்திபீடங்கள் காணப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இச் சக்திபீடங்கள் பற்றி பல்வேறான கருத்துகளும் காணப்படுகின்றன. எனினும் சக்திபீடங்கள் அனுபத்திநான்கு என்பதை சமயச்சான்றோர் பலரும் ஏற்றுள்ளனர். தேவி பராக்கிரமம் என்று நூலிலும், சக்திபீடங்கள் அறுபத்திநான்கு என்றே கூறப்பட்டுள்ளது. சக்தியை வேதங்கள் கன்னி என்று போற்றுகின்றன. சக்தி அருளாட்சிபுரியும் இடங்களைச் சக்திபீடங்கள் என அழைப்பர். பல்வேறு சமயச் சான்றோர்களின் கருத்துப்படி, உலகிலே அறுபத்திநான்கு சக்திபீடங்கள் இருப்பதாகவும், அவற்றுள் புவனேஸ்வரி பீடமெனப் போற்றப்படும் சக்திபீடம் நயினாதீவிலுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மணித்தீவில், புவனேஸ்வரிபீடம் உண்டெனக் காளிதாசனால் கூறப்பட்டுள்ளமை, நயினாதீவிலுள்ள நாகபூசணி அம்மன் எழுந்தருளியுள்ள பீடத்தையே குறிக்கும். பட்டினத்தடிகள் வாக்கிலும் நயினாதீவே, மணித்தீவென்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கராச்சாரியார் கருத்திலும், நயினாதீவே மணித்தீவு என்ற போற்றப்பட்டுள்ளது. எனினும், புத்தபீடிகை இங்குள்ளதாகக் கருதி, பௌத்தர்கள் நயினாதீவை நாகதீவெனப் போற்றி வருகின்றனர்.

தற்காலத்தில் நயினாதீவு என்று வழங்கப்படும் இத்தீவு நயினார்தீவு, நாகநயினார்தீவு, நாகதீவு, நாகேஸ்வரம், மணிநாகதீவு, பிராமணத்தீவு, மணிபல்லவம், நாகதீபம், நாவலத்தீவு, நரித்தீவு, மணித்தீவு, உறார்லெம் எனப் பலவாறு அழைக்கப்பட்டுள்ளது. இத்தீவில் காணப்படும் வணக்கமுறைக்கும் நாகர்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இலங்கையில் வல்லமை பெற்ற நாக அரசுகர் காணப்படடுள்ளன. நாகதீவில் (நயினாதீவு) காணப்பட்ட நாக அரசு வல்லமைபெற்ற நாக அரசாகக் காணப்பட்டுள்ளது. நாகர்கள் பண்பாடுடைய கலாச்சாரத்தையுடைய திராவிட மக்கள். நாகர் என்ற சொல்லிலிருந்தே நாகரிகம் என்ற சொல் தோன்றிற்றென்று. இம்மக்கள் பௌத்தமத வருகையால் பௌத்தமதத்தைத் தழுவினர். நாகர் குடியிருப்புக்கள் ஈழமெங்கும் காணப்பட்டுள்ளது. இவர்களுடைய வணக்கமுறையில் நாகவணக்கம் முதன்மை பெற்ற வணக்கமாகக் காணப்பட்டுள்ளது. நாகர் ஆட்சி நயினாதீவில் வலுப்பெற்றிருந்தமையைக் குறிக்க, இவ்வூரில் வழக்கத்திலுள்ள பெயர்களான, நாகராசா, நாகப்பன், நாகரத்தினம், நாகேஸ்வரன், நாகேஸ்வரி, நாகன், நாகேசு, நாகலிங்கம் போன்ற பெயர்களே சான்றாகக் காணப்படுகின்றன. அவ்வாறே இத்தீவிலுள்ள ஸ்ரீநாகபூசணி அம்பாளை, நாகம்மாள், நாகாச்சி, நாகேஸ்வரி, நாகபூசணி, நாகராஜேஸ்வரி எனப் பல நாமங்களால் குறிப்பிடுவர். நாகர்களின் பாரம்பரிய எச்சமாக இன்றும் இங்கு நாகவழிபாட்டுமுறை சிறப்பாகப் போற்றப்படுகின்றது.

அருள் பிரவாகமெடுத்துக் காணப்படும் இடங்களில், நாகவழிபாடும் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. நினைத்த மாத்திரத்தில் தாம் விரும்பிய உடலுக்குள் புகுந்து, அருட்செயல்களை நிகழ்த்தியுள்ள சித்தர்கள், நாகவடிவிலே தலங்களிலே உறைவதாக முன்னோர்கள் கூறியுள்ளனர். பிறர் அறியாது விரைந்து தம்மை மறைத்துக் கொள்ளவும், தேவை ஏற்படுத்தும் காலத்தில் அச்சுறுத்தவும், மிகக் குறுகிய இடத்திலும் தம் உடம்பை அடக்கவும, பாம்புரு ஏற்றதாகக் காணப்படுகின்றது. ஆலயங்களிலே சித்தர்களும், ஞானியரும் வாழ்ந்து தம் பூதுஉடலை விட்டுவிடடு, அங்கேயே தங்கியிருந்து, விக்கிரகங்களின் மூலம் தம்மை நாடிவரும் பக்தர்களுக்கு, அருள் பாலிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆலயங்கள் பலவாகக் காணப்பட்டபோதிலும், ஒருசில ஆலயங்கள் அருட்பிரவாகமுடையனவாகக் காணப்பட்டு, மக்கள் கூட்டமும் அதிகமாகக் காணப்படுவதற்கு இவ்வாறான சக்தியே ஆதாரமாயுள்ளது.



ஈழத்தில் சித்தர்களும், ஞானியரும் வாழ்ந்து சமாதியடைந்த அத்தனை தலங்களுமே, அருட்பிரவாகமுடையனவாகக் காணப்படுகின்றன. நல்லூர் கந்தசுவாமிகோயில், தொண்டைமானாறு, கீரிமலைச் சிவன்கோயில், நயினாதீவு ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயம், தெல்லிப்பளை ஸ்ரீதுர்க்கை அம்மன் ஆலயம், கதிர்காமம் போன்ற ஆலயங்கள் இவற்றுக்குச் சான்றாகக் காணப்படுகின்றன. திருப்பதியில கொங்கணவர் என்ற சித்தரும், பழனியில் போகரும், சிதம்பரத்தில் திருமூலரும், திருவண்ணாமலையில் இடைக்காடரும், மதுரையில் சுந்தரானந்தரும், மருதமலையில் பாம்பாட்டிச் சித்தரும் இன்றும் உறைவதாகவும், இவ்வாலயங்களின் அருட்பொலிவிற்கு இச்சித்தர்களே காரணமெனவும் கூறுவர். சித்தர்கள் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டவர்கள். இவர்கள் தேவை ஏற்படும்பொழுது மானிட உடலுடனோ, அந்தர்யாமியாகவோ இருந்து உலகத்துக்கு வேண்டிய பணிகளைச் செய்வர். இந்தச் சித்தர்கள், கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் மூலம் அருள் செய்வர். சித்தர்கள் தாம் விரும்பும் கோயில்களில் உள்ள மூர்த்திகளில் வெளிப்பட்டு அருள்பாலிப்பர். திருச்செந்தூரில் மூலஸ்தானத்துக்கு நேர்கீழே பாதாள அறையில், பஞ்சலிங்கம் என்ற பெயரில் ஐந்து உருவங்கள் இருப்பதாகவும், இவர்கள் அனைவரும் சித்தர்களே என்றும் கூறப்படுகின்றது. திருச்செந்தூர் முருகனின் அருட்சக்தி, விக்கிரகத்தின் மூலம் வெளிப்படுவதற்கு, அதன் அடியிலுள்ள சித்தர்களே காரணமென்பர்.

இவ்வாறே நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் அதன் சுற்றாடலிலும் சித்தர்களும், ஞானியரும், அருளாளர்களும் உறைந்துள்ளனர். அன்னையின் அருட்பிரவாகத்திற்கும் இங்குறைந்த இப்பெருமக்களே காரணமாவர். இவ்வாலயத்திலுள்ள சுயம்புவாய் அமைந்துள்ள ஐந்து தலையுள்ள சர்ப்பச்சிலை, எங்குமே காணப்படாத புதுமையும் அற்புதமும் கொண்ட அமைப்பாகும். இச்சர்ப்பத்தின் முன்பாகவே நாகராஜேஸ்வரியின் திருவுருவம் காணப்படுகின்றது. இவ்வாறான தோற்ற அமைப்பை நோக்கும்போது, ஆரம்பகாலத்தில் நாகவழிபாடு மட்டுமே காணப்பட்டு, பிற்காலத்தில் அம்பாளின் திருவுருவத்தை ஸ்தாபனம் செய்து, வழிபாட்டுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இவ்வாறான ஐந்துதலையுடைய படமெடுக்கும் நாகத்தினை வழிபாடு பொருளாகக் கொண்ட ஆலயத்தை வேறெங்குமே காணமுடியாது.

இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீநாகபூசணி அம்மன் ஆலயம், ஆகம முறைப்படி கிழக்கு நோக்கியவாறு, சமுத்திரத்தை நோக்கிக் காணப்படுகின்றது. இவ்வாலயம் திராவிட முறைப்;படி கட்டப்பட்டு, ஆகமமுறை தழுவிய கோவிலாகக் காணப்படுகின்றது. இங்கு சுயம்பு வடிவான நாகத்தையும், அம்பாளையும் கொண்டுள்ள கர்ப்பக்கிருகம் காணப்படுகின்றது. அத்தோடு இருநிலைவிமானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், வசந்தமண்டபம், தெற்குப்புற இராஜகோபுரம், கிழக்குப்புற ராஜகோபுரம், நவக்கிரகக் கோயில்கள், நால்வர்கோயில், சண்டேசுவரர்கோயில், பைரவர், சூரியன், சந்திரன் ஆகிய பரிவாரமூர்த்திகள், யாகசாலை, மாகசாலை, வாகனசாலை, திருக்கேணி ஆகியவற்றைக் கொண்டு அற்புதக் கோயிலாக விளங்குகின்றது.

இங்கு எழுந்தருளியுள்ள மூர்த்தமாக விளங்கும் ஸ்ரீநாகபூசணி அம்மனின் திருவுருவம், தெற்குநோக்கித் தென்கோபுரவாயில் வழியாக வணங்கக் கூடிய முறையில், மகாமண்டபத்தில் பிரதிஷ;டை செய்யப்பட்டுள்ளது. இத்திருவுருவத்தின் தோற்றமும் அங்கலட்சணங்களும், மனோன்மணி அம்பாளுக்குரியதாகக் காணப்படுகின்றது. இவ்வன்னையார் நான்கு திருக்கரங்களுடன் நிகழ்கின்றார். முன்னுள்ள வலக்கரமும், இடக்கரமும் அபயவதாகக் கரங்களாகக் காணப்படுகின்றன. பின் இடக்கரத்தில், அட்சயமாலை காணப்படுகின்றது. சக்தியானவள் காரண காரியங்களுக்காகப் பல்வேறு தோற்றங்களையும் பல்வேறு நாமங்களையும் கொண்டவளாக விளங்குவதை ஞானியர அருள்மொழிகளால் அறியலாம். அபிராமிபட்டர் சிறந்த சக்தி உபாசகர். இறைவியின் திருநாமங்களை,

நாயகி நான்முகி நாரா
யணிகை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி
சாமணை சாதி அச்சு
வாய்அகி மாலினி வாராகி
சூலினி மாதங்கி என்
னாயகி யபதி உடையாள்
சரணம் அரண் நமக்கே


என்றவாறு குறிப்பிட்டுள்ளார்.

1951 ஆம் ஆண்டு நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு வருகை தந்த பண்டிட் சேதுராமன் அவர்கள், இங்கு காணப்படும் மூலமூர்த்தியாக விளங்குவது சர்ப்ப உருவிலுள்ள மகாகுண்டலினி சக்தியே எனக் குறிப்பிட்டுள்ளார். இங்கு காணப்படும் சுயம்புருவம் பற்றிப் பல்வேறு கருத்துகளை. இங்கு வருகை தந்தோர் கூறியுள்ளனர்.

திருக்கோயில்களில் நிறுவப்படும் மூர்த்தங்களை நான்கு வகையாகப் பிரிப்பர். அவை தைவிகம், ஆசுரம், மானுடம், ஆரிடம் எனப்படும். தெய்வங்களும், தேவர்களும் பிரதிஷ;டை செய்து மூர்த்திகளை தைவிகம் என்பர். அசுரர்களால் பிரதிஷ;டை செய்யப்பட்டது ஆசுரம். மனிதர்களால் பிரதிஷ;டை செய்யப்பட்டது ஆரிடம் என்றும் அழைக்கப்படும். இந்நான்கு வகையிலும் சேராமல். தெய்வம் தானாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற இடங்களும் உண்டு. அந்த இடங்களிலுள்ள தெய்வ மூர்த்தமே சுயம்பு என்று சொல்லப்படுகின்றது. சுயம்பு என்ற சொல்லுக்குத் தான்தோன்றி என்பது பொருள்.



அருள்நிறைந்த ஞானிகளுக்கு இறைவன் காட்சி கொடுத்த இடத்திலும், அருள் ஆற்றல்மிக்க ஞானியர் தமது உடம்பை நீத்த இடத்திலும், சுயம்பு தோன்றும் எனக் கூறப்பட்டுள்ளது. ஞானி ஒருவனுக்கு இறைவன் ஜோதி வடிவில் காட்சி தருகின்ற இடத்தில், அந்தச் சோதியே நாளடைவில் கற்பிழம்பாகிச் சுயம்பாகும். எனக் காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள் கூறியுள்ளார். சுயம்பு வடிவம், பலதரப்பட்ட உற்பாதங்களின் விளைவாகச் சிதைவுறினும், திரும்பவும் பிரதிஷ;டை முதலிய கிரியைகள் இன்றியே வழிபடத்தக்க பெருமை வாய்ந்தது. சேதமடைந்த பகுதியை, வெள்ளி முதலிய உலோகங்களால் நிரவித் தொடர்ந்தும் பூசிக்கலாம் என்பது ஆன்றோர் வாக்கு.

சில்பரத்தினம் என்ற நூலிலும், சுயம்புருவம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சுயம்புருவம் பலவகைப்படும். சில குட்டையாகவும், சில குட்டையாகவும், சில தட்டையாகவும், மெல்லிய தோற்றம் பெற்றவையாகவும் காணப்படும். சில சுயம்புருவங்கள் பீடத்துடனும் இன்னும் சில பீடமற்றும் காணப்படும். சுயம்புருவங்கள் கோயில்களில் மட்டுமன்றிக் காடு, மலை, ஆறு, கடல், புண்ணியதீர்த்தம், புண்ணியத்தலங்கள் ஆகிய இடங்களிலும் காணப்படும். இவற்றைப் பூசிப்பதால் சகல நலங்களும் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறான சிறப்புகளைக் கொண்ட சுயம்புருவமே நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயக் கருவறையிலும் காணப்படுகின்றது.

தென்னிந்திய சிற்பவல்லுனரான திரு. நரசிம்மன் அவர்கள், மூலஸ்தானத்திலுள்ள அமைப்பைப் பார்த்தபின், 'நயினாதீவில் மூலஸ்தான அம்மன் போல இருப்பது நாகப் பிரதிஷ;டையே. இது தேய்ந்து அம்மன் போலத் தெரிகின்றது. இதற்குப்பின்னால் ஐந்து தலையுள்ள நாகப்பிரதிஷ;டை ஒன்றுண்டு. இந்தியாவிலும் நாகவழிபாட்டிற்கே பிரத்தியேகமாகவுள்ள புராதன கோயிலைக் காண்பதரிது. கலப்பற்ற, தூய்மையான நாகவழிபாட்டுப் பண்பினை நயினாதீவிலே காணலாம். சரித்திர காலத்திற்கு எட்டாத காலந்தொடக்கம் உள்ள கோயில் இது என்பது புலனாகின்றது' என்று குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாலயத்தைத் தரிசித்த பிரபல ஸ்தபதியான, காரைக்குடியைச் சேர்ந்த எம். செல்லக்கண்ணு என்பவர், 'மூலஸ்தானத்திலுள்ள விக்கிரகத்தின் அமைப்பைப் பார்த்தால், அது ஆயிரம் வருடங்களுக்கு முந்தியதாகப் புலப்படுகின்றது. ஆனால் நாகப்பிரதிஷ;டை இதற்கு முன்னர் ஏற்பட்டிருக்க வேண்டும். மூலஸ்தான விக்கிரகத்திற்குப் பின்னாலுள்ள நாகபடம் பார்ப்பதற்குப் பயங்கரமாக உள்ளது. சீறுவது போல உள்ளது' என்று கூறியுள்ளார்.

இவ்வாறாக நயினையம்பதியிலுள்ள சுயம்புருவத்தைப்பற்றிய பலரும் பல்வேறான கருத்துகளை வெளியிட்டபோதிலும், ஸ்ரீகாஞ்சிப்பெரியவர், 'சுயம்புருவங்களின் மூலத்தையோ அன்றி அதன் அமைப்பையோ ஆராய்வது உகந்ததன்று' என்று கூறியுள்ளமை இங்கு அவதானிக்கத்தக்கது.

பாம்புகளை மாலையாக அணிபவர் முழுமுதற் கடவுளாகிய சிவன். கி.பி. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சக்தி உபாசகரான அபிராமிபட்டர். இவரியற்றிய அபிராமி அந்தாதியில் அன்னை சக்தியானவள் சர்ப்பங்களைக் கொண்டவளாகக் காணப்பட்டமையைச் 'சாதி நச்சுவாய் அகிமாலினி' அதாவது சர்ப்பங்களை மாலையாக அணிந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். கி.பி. 14 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வாழ்ந்தவர் அருணகிரிநாதர். இவர் அருளிய திருப்புகழிலே 'சந்திரசேகரி நாகபூஷணத்தி' என்றும், குறிப்பிடுவது நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளையே என்பது குறிப்பிடத்தக்கதாகும். வேறெங்கும் இப்பெயரைத் திருநாமமாகக் கொண்ட அம்மாள் இல்லை என்பர் கற்றறிந்த சான்றோர்.

ஆதிசங்கரரால் பாடப்பட்ட லிங்காஷ;டகத்தில், 'பணிபதி வேஷ;டித சோபிதலிங்கம்' என்பதன் பொருள், பாம்பின் படத்தினால் இயற்கையாகச் சுற்றப்பட்ட அல்லது மூடப்பட்ட லிங்கத்தைக் குறிக்குமெனக் கூறப்பட்டுள்ளது. இக்கூற்றுக்கு உதாரணமாக, நயினையம்பதியிலுள்ள மூலமூர்த்தமாகிய திருவுருவக்காட்சியம் ஐந்துதலையுள்ள சர்ப்பமுமே காணப்படுகின்றது. இங்குள்ள மூலமூர்த்தம், ஆழ்ந்த தத்துவக் கருத்தையுடையது. இம் மூலமூர்த்தம், ஆழ்ந்த தத்துவக் கருத்தையுடையது. இம் மூலமூர்த்தத்தை மனதில் கொள்வோர்க்குக் குண்டலினி சக்தி உண்டாகின்றது. ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றல் பெற்றவர்களே, குண்டலினி சக்தியின் துணை கொண்டு, அன்னையின் அருளைப் பெறமுடியும்.

இவ்வாறான பல சிறப்புகளோடு, மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற முப்பெருமைகளைத் தன்னகத்தே கொண்டது. நயினை ஸ்ரீ நாகபூசணி ஆலயம். இவ்வாலயத்தின் தலவிருட்சமாகக் காணப்படுவது, வன்னிவிருட்சமாகும். வன்னிவிருட்சத்திற்கும் விஜயதசமிக்கும் நிறையவே தொடர்புகள் உண்டு. இவ்வாலயத்திற்குரிய புண்ணியதீர்த்தம் நயினாதீவின் மேற்குக் கடற்கரையோரத்தில் உள்ளது. இது தற்போது தீர்த்தக் கேணியாகவுள்ளது. நயினாதீவுச்சாமியார் என்றழைக்கப்படும் முத்துக்குமாரசுவாமி அவர்கள் தமது ஞானநிஷ;டையில் இதனை அறிந்து, மக்களின் துணையோடு வைரக்கல்லினால் இக்Nணியை அமைத்தார். இது இராமேஸ்வரத்திற்கு நேரே அமைந்துள்ளது. இத்தீர்த்தத்தின் ஊற்று, கடலின் மத்தியில் நன்னீராகச் சுரப்பதாகக் கூறுவர். இக்கேணி தீர்த்தத் திருவிழாவின் போது, அம்பாள் தீர்த்தமாடும் இடமாகவும் அமைந்துள்ளது. இத்தீர்த்த விசேடம் காரணமாக, இறந்த ஆன்மாக்களுக்குச் சாந்தி செய்யும் இடமாகவும் இத்தீர்த்தம் பயன்படுகின்றது.



ஈழத்தின் பல பகுதிகளில் இன்றும், கண்ணகி வழிபாடு புகழ்பெற்ற வழிபாடாகக் காணப்படுகின்றது. தமிழ் மக்கள் கண்ணகி என்றும், சிங்கள மக்கள் பத்தினித் தெவியோ என்றும் வணங்கி வருகின்றனர். இடைக்காலத்தில் நயினை நாகபூசணி அம்மன் ஆலயம், கண்ணகி வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டதென்ற கூற்றம் காணப்படுகின்றது. ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்கள் கண்ணகி வழிபாட்டை ஆதரிக்கவில்லை. இக் காரணத்தால் கண்ணகி வழிபாட்டுத்தலங்களைப் பெயர்மாற்றம் செய்ய ஊக்குவித்தார். கண்ணகி அம்மன் கோயில்களை, இராஜராஜேஸ்வரி அம்மன் கோயில்களாக மாற்றினார். இவர் காலத்திலேயே இங்குள்ள அம்பாளை நாகபூஷணி என அழைக்கும் வழக்கமும் ஏற்பட்டது.

ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் அமைந்துள்ள காணியின் பெயர், பப்பரவன்சல்லி என்பதாகும். இக்காணி 56 பரப்பைக் கொண்டது. அருச்சுனன் தீர்த்த யாத்திரையின் போது இங்கு வந்து, நாககன்னிகையை மணந்தாளென்றும். இவர்களுக்குப் பிறந்த பெயராகிய பப்பரவாகன் என்ற பெயரையே இக்காணிக்கு வழங்கினரென்றும் ஐதீகமொன்றுண்டு, ஆரம்பத்தில் நாகராஜேஸ்வரி கோவிலில் முத்து, பவனம், செய்ய ஆகியவற்றாலான மூன்று தேர்கள் காணப்பட்டதாகவும் அவற்றைக் கடல் கொண்டுவிட்டதாகவும் கர்ணபரம்பரைக் கதையொன்றுண்டு. இதுபற்றிக் காணப்பட்ட கற்சாசனம் உடைக்கப்பட்டு விட்டது. இச்சாசனத்தின் எஞ்சிய பகுதி கோவிலில் உண்டு.

கி.மு. 5 ஆம், 4 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மணிபல்லவமென்ழைக்கப்பட்ட நயினாதீவிற்குப் புத்தர் வந்துள்ளார் என்பதை மகாவம்சக் குறிப்புகளில் காணலாம். நயினாதீவிலே காணப்பட்ட மாணிக்கங்கள் பதிக்கப்பெற்ற பீடத்தைப் பெற மகோதரன், சூளோதரன் என்ற இரு அரசர்களிடையே சண்டை நடைபெற்றது. புத்தர்பெருமான் இப்போரை நிறுத்தி இப்பீடம் இந்திரனால் அமைக்கப்பட்டதென்றும், சக்தியின் அறுபத்திநான்கு பீடங்களில் இங்குள்ள பீடம் புவனேஸ்வரிபீடமென்றும் குறிப்பிட்டு, பீடத்திற்குரிய அன்னையை வணங்கி அமைதி பெறுமாறும் உபதேசம் செய்து அமைதியை நிலைநாட்டியதாக மணிமேகலை என்ற நூலிலே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே புத்தர் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படும் காலப்பகுதிக்கு முன்பே இங்கு சக்திபீடம் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிராஞ்ச உற்பத்தி, சியாமளதாண்டகம் என்னும் நூல்களிலும், புவனேஸ்வரி சக்திபீடம் மணிபல்லவத்தீவில் உள்ளதென்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணகியின் பழவினையோடு ஈழத்திலுள்ள பல இடங்கள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளன. பாண்டியனால் தண்டனை பெற்று உயிரிழந்து பின் உயிர்பெற்றெழுந்த கோவலன். மாதவியின் பெயரை முதலில் குறிப்பிட்டான். இதனால் கோபங்கொண்ட கண்ணகி ஐந்தலை நாகமாகத் தன்மை உருமாற்றி, மதுரையை விட்டு நீங்கி அங்கிருந்து தெற்குநோக்கிச் சென்று, முதலில் தங்கிய இடம் நயினாதீவு. பின்னர் வட்டுக்கோட்டைக்கண்மையிலுள்ள சீரணி, அளவெட்டி அங்கணாமைக்கடவை, சுருவில் ஆகிய இடங்களில் தங்கினாளென்று ஐதீகமுண்டு. இவ்வூர்களிலுள்ள ஆலயங்களில் அம்மன் சந்நிதானத்தோடு ஐந்துதலை நாக சந்நிதானமும் காணப்படுவது மேற்கூறிய ஐதீகத் தொடர்பை விளக்குவதாகக் காணப்படுகின்றது.

நயினாதீவு, நாகர் குடியிருப்பாகக் காணப்பட்டமையால் இத்தீவு நாகரினத்தவரோடும் அவர்களது வழிபாட்டுப் பெயரோடும் தொடர்புபட்ட பெயர்களையே கொண்டிருந்தது. பின்னர் நாக வணக்க முறையிலிருந்து அம்மன் வணக்கமுறைக்கு மாற்றப்பட்ட பின் நயினாதீவு என்ற பெயரைப் பெற்று இன்றுவரை அப்பெயரே வழக்கத்திலும் காணப்படுகின்றது. ஐம்பெரும் காப்பியங்களுள் மாநாயகன் என்னும் பெயர் புகழ்பெற்ற பெயர். இப்பெயருடையோர் அக்காலத்தில் வாணிபத்தில் சிறந்தோங்கியோராகக் கருதப்பட்டனர். நயினாதீவு என்ற பெயர்க்காரணத்தோடும் இப்பெயர் தொடர்புபட்டுள்ளது. சிலப்பதிகாரம் கண்ணகி வழக்குரை காதையிலும் நாகதீவுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்ணகியின் தந்தையாகிய மாநாயகனுடன் மாசாத்துவான் என்பானும் கண்ணகியின் காற்சிலம்புக்கு இரத்தினம் வாங்க, நயினாதீவிற்கு வந்துள்ளனர். அப்பொழுது நெடுந்தீவில் வெடியரசன் என்பான் நோட்டைகட்டி வாழ்ந்து வந்தான். இவனுடைய தம்பி வீரநாராயணன், இவனுடைய மனைவி நீலகேசி. இருவரும் நயினாதீவிலுள்ள நாகரத்தினங்களுக்குக் காப்பாளராயிருந்தனர். நயினாதீவிற்கு வந்த வணிகரோடு ஏற்படட சண்டையில் நீலகேசியும் வீரநாராயணனும் இறந்தனர். இவர்கள் சண்டையிட்ட இடம் பரதவர்கல் என அழைக்கப்படுகின்றது. சண்டை நடந்து முடிந்த பின்னர் இரு வணிகர்களும் நயினாதீவிற்கும் அதற்கு வடக்கேயுள்ள புளியந்தீவிற்குமிடையே காணப்பட்ட கால்வாய் வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்பொழுது புளியந்தீவிலுள்ள சிவன்கோவிலிலிருந்து கடல்மார்க்கமாக நாகமொன்று வாயிலே இவைக் கல்வியவாறு நீந்தி வருவதைக் கண்ணுற்றனர். இவ்வேளையில், நாகத்தைக் கொல்லக் கருடனொன்று மேலே வட்டமிட்டுப் பறந்தது. கருடனைக் கண்டு பயந்த நாகம், கடல்நடுவே உள்ள கல் ஒன்றினைச் சுற்றிக்கொண்டு அடைக்கலம் வேண்டித் தலையை உயர்த்தியவாறு காணப்பட்டது. இவ்வேளை கருடனும் அருகேயுள்ள கல்லொன்றில் அமர்ந்து கொண்டது.

இவற்றைக் கண்ணுற்ற மாநாயகனும், மாசாத்துவனும் நாகத்தைக் காப்பாற்றுமாறு நயினாதீவிலுள்ள நாகராஜேஸ்வரியை வேண்டினர். அப்பொழுது கருடனும் பறந்து சென்றுவிட்டது. நாகமும், மலருடன் நயினாதீவை நோக்கிச் சென்றது. இன்றும் கடல்நடுவே கருடன் சுற்றிய கல், பாம்பு சுற்றிய கல் என இரண்டு கற்கள் இருப்பதாக இவ்வூர் மக்கள் கூறிப் பெருமிதமடைவர். இச்சம்பவத்தின் பின் இவ்வணிகர்கள் நயினாதீவின் வடகிழக்கு மூலையைச் சென்றடைந்தார்கள். இவர்கள் ஓடத்தில் சென்று இறங்கியதால் அவ்விடம் ஓடத்திடல் என அழைக்கப்படுகின்றது. இவ்விடத்தில் லிங்கமொன்றைத் தாபித்து, ஐயனாரைக் காவல் தெய்வமாகப் பிரதிஷ;டை செய்தனர். இக்கோயில் தற்போதும் உண்டு. இவ் வணிகம் தினமும் அம்பிகையைத் தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். நாகர்கள் வழிபட்டுவந்த அம்பாளுக்குக் கோயில்கட்ட இவர்கள் உதவியுள்ளனர்.



ஏனைய தீவுகளைவிட இங்கு சர்ப்பங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன. இங்கு ஆதியில் பெருமளவில் நாகரத்தினங்கள் கிடைத்ததாகவும், மக்கள் தொகை பெருகக் காடுகள் அழிக்கப்பட, நாகங்களும் மறைந்து நாகரத்தினமும் அற்றுப்போயிற்று. இத்தீவிற்குச் சற்றுத் துரத்திலே கடல்நடுவே அமைந்துள்ளது அனலைதீவு. அனலை தீவில், புளியந்தீவு என அழைக்கப்படும் பகுதியிலே காணப்படும் நாகதம்பிரான் விக்கிரகம், டச்சுக்காரரால் நாகபூசணி அம்மன் கோயில் தாக்குப்படுமுன் நயினாதீவிலேயே இருந்ததென்பர்.

சிறிய கோயிலாக வணங்கப்பட்ட நாகபூசணி அம்மன் கோயில், மாநாயகனின் நாலாவது சந்ததியிலுள்ள வீரசாமிச்செட்டியார் என்பவரால் கி.பி. 1620 க்கும் 1624 க்கும் இடைப்பட்டகாலத்தில் கற்கோயிலாகக் கட்டப்பட்டது. அதற்கு முன்னர் மானச பூசை நடைபெற்று வந்துள்ளது. பின்னர் கிரியா வழிபாட்டை நிகழ்த்த எண்ணங்கொண்ட செட்டியார், இந்தியாவிலிருந்து பட்டரையும். பண்டாரத்தையும் அழைத்து வந்தார். பண்டாரம் வேளாண் மரபைச் சேர்ந்தவர். இவரது பெயர் கண்ணப்பன் என்பதாகும்.

நாகத்தீவு, பட்டர் மரபினரின் பெயரிக்காரணத்தாலேயே நாயனார்தீவு என அழைக்கப்பட்டுப் பின், நயினாதீவென மருவிற்றென்பர். பட்டர் மரபு பல பிரிவுகளைக் கொண்டு காணப்பட்டது. இவர்களுள் பாம்புக்குட்டிப்பட்டர் மரபினரே இறை பூசைசெய்வோராக விளங்கினர். இம்மரபில் வந்த பிரமஸ்ரீ இராமச்சந்திரர் முதற் பூசகராக வந்தவர். இவர் பல சிறப்புகளைக் கொண்டவர். இவருடைய சிறப்பின் காரணமாக, வரலாற்றுப் பெருமைகொண்ட நாகதீவு நாயனார் தீவாயிற்று.

பேச்சுவழக்கில் நாளடைவில் நாயனார் தீவென்பது திரிபுபட்டு, நயினார் தீவாகிப் பின் நயினாதீவாக வழங்கப்பட்டு வருகின்றது. கீழக்கரையிலிருந்து சங்கு குளிக்க வந்த இஸ்லாமியர், நயினாதீவின் தெற்குப் பகுதியில் குடியேறினர். இவர்கள் நயினாதீவை நெயினாதீவென அழைக்கும் வழக்கும் காணப்பட்டுள்ளது. வையாபாடல் குறிப்பொன்றில், நயினாதீவிலுள்ள பட்டர்கள் மலையாளத்திலுள்ள ஸ்ரீ சங்கராச்சாரியாரைத் தரிசிக்கச் சென்றதாகக் கூறப்படும் செய்தியை,

'நச்சுவிழி மடவார்கள் வாசம்செய்யும்
நாகநயினாதீவில் வாழ்வோரும்...'


என்று குறிப்பிட்டுள்ளார். நாகர்களின் பின் நாயனார்பட்டர் பூசை செய்ததால் நாகநயினார் தீவெனவும் காரணப்பெயராக அழைக்கப்பட்டது.

ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய மணிமேகலையின் நாயகி, மணிமேகலை. இந்நூல் சீத்தலைச் சாத்தனாரால் இயற்றப்பட்டது. மாதவியின் மகளான இவள் தனது பழம்பிறப்பை நயினாதீவிலேயே அறிந்தாள். மணிமேகலை, இங்கு காணப்பட்ட கோமுகிப் பொய்கையில் இருந்து அமுதசுரபியென்றும் அட்சயபாத்திரத்தைப் பெற்று, இதன்மூலம் பசித்தோர்க்கு உணவளித்து, பசிதீர்த்து ஆதரித்துள்ளாள். கோமுகிப்பொய்கை இருந்த பள்ளமும் இங்கு காணப்படுகின்றது.

மணிபல்லவத்தீவாகிய நயினாதீவோடு பல்லவர் குலமும் தொடர்புபட்டுக் காணப்படுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்தை ஆண்டவன் கிள்ளிவளவன். இவ்வேளை நாகநாட்டரசன் மகளாகிய பீலிவளை என்பவள் காவிரிப்பூம்பட்டினத்தில் நடைபெற்ற இந்திரவிழாவைக் காணவந்த வேளையில், இப்பெண் மீது கிள்ளிவளவன் காதல்கொண்டான். இம்மன்னன் தொடர்பால், கருவுற்ற தனது மகள்மீது கோபங்கொண்ட நாகநாட்டரசன், பீலிவளையைக் கம்பளச்செட்டி என்னும் வணிகனுடன் மணிபல்லவத்தீவிற்கு நாடுகடத்தினான். இங்கு காணப்பட்ட நாகவழிபாடும் ஆலயமும் பீலிவளைக்கு மனநிறைவைக் கொடுத்தது.

பின்னர் பீலிவனை ஒரு மகனைப் பெற்றெடுத்தான். அக்குழந்தையை அதன் தந்தையான கிள்ளிவளவனிடம் சேர்க்கும்படி, கம்பளச்செட்டியிடம் யாருமறியாவண்ணம் கொடுத்தனுப்பினாள். இவ்வாறு குழந்தையைக் காவிரிப்பூம்பட்டினத்தின் தலைநகரான பூம்புகாருக்குக் கொண்டு செல்லும் வழியில் மரக்கலம் உடைந்தது. தப்பிக் கரையேறியோக் கிள்ளிவளவனிடம் நடந்ததைக் கூறினர். கிள்ளிவளவன் அனுப்பிய ஆட்கள், எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. இவ்வேளையில் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை, தொண்டைக்கொடியால் சுற்றப்பட்டு, தொண்டைக்கொடியான் சுற்றப்பட்டமையால், தொண்டைமான் என்றும், திரைகளால் கரை சேர்க்கப்பட்டதால் திரையன் என்றும் அழைக்கப்பட்டது. தொண்டைமான் இளந்திரையன் மணிபல்லவத்திலிருந்து வந்தமையால், இவன் சந்ததியினர் பல்லவர் என அழைக்கப்பட்டனர். இவனே பல்லவ வரலாற்றிலே கூறப்படுகின்ற தொண்டமான் இளந்திரையன். பல்லவரோடு தொடர்புடைய பெயர்களை இன்றும் ஈழத்தில் காணலாம்.

சில வரலாற்றாசிரியர்கள் மணிபல்லவம் பற்றிய பல கருத்து வேறுபாடுகளைக் கொண்டுள்ளனர். மணிபல்லவம் என்ற பிரபலமான நாவலை எழுதியவர் நா. பார்த்தசாரதி அவர்கள். அவர் தமது நாவலில் நயினாதீவையே மணிபல்லவம் என்று குறிப்பிட்டுள்ளார். 1957 இல் இந்நாவலை எழுதுமுன் நயினாதீவிற்கு வந்து, இடங்களைப் பார்வையிட்டுச் சரித்திரச் சான்றுகளைத் திரட்டிச் சென்றுள்ளார்.

இவ்வாறான பல்வேறு பெருமைகளுடன் கூடிய தீவில், அருள்மிகப் பெற்ற ஆலயமாகத் திகழ்வது நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம். வீராசாமிச்செட்டியாரால் கற்கோயிலாகக் கட்டப்பட்ட இக்கோயிலைப் போத்துக்கேயர் இடித்துத் தரைமட்டமாக்கினர். ஆலயத்திலுள்ள பெறுமதியான பொருட்கள் பாவும் சூறையாடப்பட்டுத் தேர் கடலுள் தள்ளப்பட்டது. திரவியங்களைச் சூறையாடுவதோடு, தமது மதத்தையும் பரப்புவதில் கண்ணாயிருந்த போத்துக்கேயரின் முயற்சி, இத்தீவு மக்களிடம் சிறிதேனும் பலிக்கவில்லை. போத்துக்கேரினால் ஏற்படுத்தப்பட்ட இன்னல்களைத் தாங்கிக்கொண்டு, ஸ்ரீநாகபூசணியின் பாதாரவிந்தங்களை தஞ்சமெனக் கருதி, தாம்சார்ந்த இந்துமதத்தில் மிக உறுதியாக இருந்து வெற்றியும் கண்டனர்.

நாகபூசணி அம்மன் கோயிலை இடித்த போத்துக்கேயர், கோயிற்கற்களைக் கொண்டு சங்குமாவடியில் கோட்டையொன்றைக் கட்டினர். கோயில் இடித்த கற்களை மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு செல்ல முயன்றபோது மரக்கலம் நகரவில்லை. மரக்கலத்துள் காணப்பட்ட ஐந்தலை நாகலிங்கக்கல்லைக் கடலுள் வீசிய பின்பே மரக்கலம் நகர்ந்தது. பின்னர் இச்சிலையைக் கண்டெடுத்த மக்கள், இதனை நாகன்காடு என்ற இடத்தில் வைத்துப் பூசித்தனர். போத்துக்கேயர் ஆட்சியில் 32 கோயிற்பற்றுக்கள் காணப்பட்டன. இவற்றுன் ஒன்றாக நயினாதீவு காணப்பட்டுள்ளது.

போத்துக்கேயர் காலத்தில், பட்டர்மரபிலே தோன்றிய இராமலிங்கர் இராமச்சந்திரர் என்பவரே கோயில் எஜமானரால் பணியாற்றினார். போத்துக்கேயர் கோயிலை இடித்தபோது இவ் அம்பாளை வல்லிக்காடு என்ற இடத்தின் மேற்கில் ஒரு ஆலம்பொந்தினுள் ஒளித்து வைத்துச் சலியன்ஐயர் என்பவனாக காவலுக்கு நியமித்தார். புதிய ஆலயம் கட்டப்படும் வரை நயினாதீவு இரட்டங்காலி முருகன் ஆலயத்திலேயே அம்பாளுக்குப் பூசைகள் நடைபெற்றன. கி.பி. 1788 இல் சிறிய கோயிலொன்றைக் கட்டி அம்பாளைப் பிரதிஷ;டை செய்தனர்.

கி.பி. 1792 இல் இக்கோயிலை ஒல்லாந்தர் அழிக்க முற்பட்டபோது, கதிரித்தம்பி என்னும் அம்பாள் பக்தர், 'இது மாதா கோயில்' எனக் கூறிக் காப்பாற்றியுள்ளார். ஒல்லாந்தர் ஆட்சியில், 5 ஆம் வட்டாரத்தில் புரட்டஸ்தாந்து மதநிலையம் மக்கள் ஸ்ரீ நாகபூசணி அம்பாளிமீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையையும் பக்தியையும், தாம் கைக்கொண்ட மதத்தின்மீது கொண்ட வைராக்கியத்தையுமே எடுத்துக்காட்டுகின்றது. ஒல்லாந்தர் காலத்தில் தூத்துக்குடி முஸ்லீம்கள் இங்கு குடியேறி, இத்தீவின் தெற்கில் பள்ளிவாசலும் அமைத்தனர்.



ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1944 ஆம் ஆண்டு நயினாதீவில், பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டது. இவ்விகாரை கட்டப்படுமுன், இங்கு பௌத்தலிகாரையொன்று இருந்துள்ளது. அப்பகுதி புத்தர்வளவு என அழைக்கப்பட்டது. பழைய பௌத்த விகாரை இருந்து இடத்திற்கு அருகில் பொய்கையிருந்த அடையாளமும் காணப்பட்டது. இவ்விடத்தை புத்தபள்ளம் என்பர். இப்பள்ளம் கோமுகிப் பொய்கை இருக்கு இடமென்ற ஐதீகமுண்டு. தற்போதுள்ள பௌத்தக் கோயில். இத்தீலின் இரண்டாம் வட்டாரத்தில் கடற்கரையோரமாகவுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த பின் இவ்விகாரை பரந்த நிலப்பரப்பில் விஸ்தரிக்கப்பட்டது. பழைய சரித்திர வரலாறுகளைக் கருத்தில் கொண்டு இத்தீவைப் புத்தர் தரிசித்த இடமாகக் கருதி இவ்விகாரை கட்டப்பட்டுள்ளது.

நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெறும் விழாக்கள் சிறப்புடையவை. மாதந்தோறும் பூரணையில் ஸ்ரீ சக்கரத்தில் வித்தியோபாசனை செய்யப்படுகின்றது. ஸ்ரீ சக்கரபூசையில், அம்பாள் சௌந்தரயவல்லியாகத் திகழ்வாள். இங்கு நவராத்திரி பூசையும் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. ஆரம்பகாலத்தில் இங்கு ஆறு நாட்களே திருவிழா நடைபெற்றுள்ளது. பின்னர் ஆலய மகோற்சவம் பத்து நாட்கள் நடைபெற்றுள்ளது. 1960 ஆம் ஆண்டிலிருந்து மகோற்சவம் 15 நாட்களாக மாற்றப்பட்டது. ஆனி மாதத்தில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி, 15 தினங்கள் நடைபெற்றுத் தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெறும். அம்பாள் இரதோற்சவத்தில் ஆரோகணித்து வரும் காட்சியும், மாலையில் நடைபெறும் பச்சைசாத்துதலும் கண்கொள்ளாக் காட்சியாகக் காணப்படும். இவற்றோடு, கொடியேற்றத் திருவிழா, கைலாசவாகனத் திருவிழா, மஞ்சட் திருவிழா, வேட்டைத் திருவிழா, குதிரைவாகனத் திருவிழா, சப்பறத் திருவிழா, தேர்த் திருவிழா, தீர்த்தத் திருவிழா, தெப்போற்சவத் திருவிழா என்பனவும் மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழாக்களாகும்.

இங்கள்ள அன்னை ஸ்ரீ நாகபூசணி, வேண்டுவார் வேண்டுவனவற்றை அருள்பவளாகக் காணப்படுகின்றாள். திருமணமாகாத கன்னிப்பெண்கள் அன்னையின் அருளால் திருமண வாழ்க்கை திடைக்கப் பெற்றுள்ளனர். மகப்பேறில்லாதோர் நாகப்பிரதிஷ;டை செய்து பூசித்து, மகப்பேறு பெற்றுள்ளனர். நோயுற்றோர் அன்னையே சரணமென்று துதித்து, நோய்கள் நீங்கப்பெற்றுள்ளனர். இவ்வாறாக அன்னை ஸ்ரீ நாகபூசணியின் அருள் சொல்லுந்தரமன்று. தஞ்சமென்று வந்தோரைத் தாயாகிக் காத்தருள்வதைப் பலருடைய அனுபவங்கள் மூலமாக அறியலாம்.

இங்கு காலத்திற்குக் காலம் பல திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. 1935 ஆம் ஆண்டிலேயே தற்போதுள்ள கோபுரம் கட்டப்பட்டது. இங்குள்ள அழகிய தேர் 1957 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இத்தேர் நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகளைக் கொண்ட அழகிய தேராகக் காணப்படுகின்றது. பன்னிரண்டு வருடங்களுக்கொரு முறை கும்பாபிNஷகம் செய்யப்படவேண்டுமென. இந்து சாத்திரங்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறே 1951, 1965, 1983 ஆம் ஆண்டுகளில் புனராவர்த்தன கும்பாபிNஷகம் மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது.

நயினாதீவின் தொன்மையும், வழிபாடும் நாலாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தொன்மையுடையது. இலங்கையிலுள்ள வழிபாட்டுத் தலங்களுள் காலத்தால் முந்திய, தொன்மையான தலங்களுள் இதுவும் ஒன்று. இதனாற்போலும் ஞானியரும் அறிஞர்களும் இப்பதிக்கு வந்து அருள்பெற்றுச் சென்றுள்ளனர். 1922 ஆம் ஆண்டில் நயினாதீவிற்கு வந்த சுவாமி ஞானப்பிரகாசர். இங்கிருந்த கற்சாசனமொன்றை வாசித்து, அச்சாசனம் 12 ஆம் நூற்றாண்டில் மகாபராக்கிரமபாகுவால் செதுக்கப்பட்டது என்ற குறிப்பிட்டுள்ளார்.

கிருபானந்தவாரியார், தவத்திரு குன்றக்குடி அடிகனார். கி.வா.ஜெகநாதன், கவியோகி சுத்தானந்த பாரதியார் போன்றோர் இங்கு வந்து ஸ்ரீ நாகபூசணி அன்னையைத் தரிசித்துச் சென்றுள்ளனர்.

ஊரின் சிறப்பால் கோயிலும், கோயிலின் சிறப்பால் ஊரும் ஒன்றுக்கொன்று இணையிலாப் பெருமையும் தொன்மையும் கொண்டு விளங்கும் நயினாதீவும், இங்குறையும் ஸ்ரீ நாகபூசணி அம்பாளும் ஈழத்தில், சக்தி வணக்கப் பெருமைக்குச் சான்றாகக் காணப்படுகின்றது.





ஓம் சக்தி !!! ஓம் சக்தி !!! ஓம் சக்தி !!!

Monday, August 22, 2011

என் இனியவளே !

என் இனியவளே !
உன்னை நினைக்கும் போதெல்லாம்
என் காதலை உனக்கு
தெரியப்படுத்த வேண்டும்
என்று நினைப்பேன் - ஆனால்
உன்னைப் 
பார்த்தவுடனேயே
மரணித்து விடுகின்றன
வார்த்தைகள் மௌனமாய்
என் நெஞ்சத்துள்

நான் ஒரு
மடையன் தான் - நீ
ருதுவாக முன்னமே
நான் உன்னைக்
காதலிக்கத் தொடங்கியது
பொருந்தாக் காதல்
புரியப் பட்டு  விடாது என்று
பிரிய முயற்சித்தேன்
உன் நினைவுகளை விட்டு ...

பிரத்தியேக கல்வி நிலையத்தில்
நான் ஓர் ஆசிரியனாய்
நீ ஓர் மாணவியாய்
உன் வகுப்பறையின் 
எதிர் வகுப்பறையில்
ஆசிரியர் கற்பிப்பதை 
கவனத்தில் கொள்ளாது
நான் கற்பிக்கும் விதத்தை - நீ
கடைக் கண்ணால்
உற்று ரசித்ததை
என்றுமே மறவேனடி..

யார் உண்ட
எச்சி உணவை நீ 
உண்ணாத போது
என் எச்சிபட்ட 
உணவை மட்டும் 
ஏன் நீ
பறித்துண்டாய் ?

மழைக்கு கூட சிலர்
பாடசாலை தாவாராம்
ஒதுங்க மாட்டார்கள்
என்று நான் கேள்விப் பட்டதுண்டு
ஆனால் நான் 
மழைக் காலம்  கூட 
விட்டு வைப்பதில்லை
உன் வீட்டு முன்னுள்ள
பாதையோரம் ...

காலை எழுந்தவுடன்
கடவுளைக் கைதொழுவேன் 
என் காதலியை
கண் முன்னே
நேர் நிறுத்து என்று
கடவுள் கூட எனக்கு
வஞ்சகம் நினைத்ததில்லை
உன்னை நான்
பார்ப்பதற்கு ..


விதி செய்த 
சதியாலும் 
ஜனம் கொண்ட
பகையாலும்
நாடு விட்டு நாடு
போக வேண்டிய
சூழ்நிலை  உனக்கு 
சென்றாய் எனை விட்டு
தொலைதூரம் ..

காலங்கள் சென்றது
காதோரம் ஓர் செய்தி
நாட்டின் நிலை 
சுமூகமானதால்
நாடு திரும்பி வந்துவிட்டாயாம்
அன்று நான் கொண்டது
அளப்பரிய
சந்தோசம் ..

என்றோ ஒரு நாள்
நான் சொல்லாமலேயே 
என் காதல்
உனக்கு புரியும்
புரியாது விட்டால்
விதி செய்த சூழ்ச்சி 
என எண்ணி
விடைபெறுவேன் 
உன் இனிமையான
நினைவுகளோடு ...


ஆக்கம்
த.சுதாகரன் 
22.08.2011
மாலை 4.30 மணி 

Sunday, August 21, 2011

தாயே நாகம்மா ...!!!

அன்னை தனை 
இழந்தோம் - ஆனாலும்
கவலைகள் மறந்தோம் 
தாய்க்குக் தாயாக 
நீ இருக்கிறாய்
என்ற பூரிப்பு தான் ...

எத்தனையோ வரம்
நாம் உன்னை
வேண்டுகின்ற போதும் 
அத்தனை வரமும் 
அளிக்கின்றாய் - ஆனாலும்
அதிலோர் 
இறுமாப்பு உனக்கு 
எந்த ஒரு வரமும்
எமக்கு எப்பவும் 
தாமதமாகவே ..!

வீடு இழந்தோம் 
வாசல் இழந்தோம் 
புலம் பெயர்ந்தோம் 
நோயுற்றோம்
வறுமை வாட்டியது
சிறுவயதில்
எண்ணிய ஆசைகள் 
கானல் நீரானது 
ஒன்றா இரண்டா 
இழப்பதற்கு
எத்தனை துன்பம் - அம்மா 
உன் கண் முன்னே 
நாமுற்றோம்

எத்தனை முறை - நீ
எம்மை எட்டி 
உதைத்தாலும் 
தாய்ப்பசுவைத் தேடி
வரும் கன்றினைப் போல் 
உன்னையே நாடிவருவோம் 

உனைவிட்டு யாரம்மா 
எமக்கு உண்டு ..?
உன் பாதம் சேரும் வரை 
எம் தாய் 
நீதானம்மா ...

தாயே ..!
நகேஸ்வரியே..!
நம் குறை நீ அறிந்து 
நலம் பல பெற்று
நல்லுலகில் நலமுடன் வாழ 
எமக்கருள் செய்வாயம்மா .....

ஓம் சக்தி ! ஓம் சக்தி ! ஓம் சக்தி !